பதிவு இரத்துச் செய்யப்பட்ட ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய நிர்வாகம் மீண்டும் செயல்பட உள்துறை அமைச்சு அனுமதி

மாரான், ஜன.29- கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகத்தினால் இரத்துச் செய்யப்பட்ட மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் பதிவினை உயிர்ப்பிக்க ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பலனாக ஆலய நிர்வாகம் மீண்டும் செயல்பட உள்துறை அமைச்சு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்வழி, ஆலயத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகம், வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்பியிருப்பதாக ஆலயத்தின் பொருளாளரும், இந்தப் பதிவு விவகார நடவடிக்கைக் குழுத் தலைவருமான டத்தோ க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

“ஒரு சில அங்கத்தினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், கடந்த 5 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த ஆலய நிர்வாகம், நிதி மோசடிகளில் ஈடுபடவில்லை என்ற நற்பெயரோடு, தனது நீதிப் போராட்டத்தில் வென்றிருக்கிறது! ஆலய நிர்வாகத்தினரின் விளக்கங்களையும், நியாயங்களையும் ஏற்றுக்கொண்ட சங்கங்களின் பதிவகமும், உள்துறை அமைச்சும் ஆலய சட்டவிதிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கியிருக்கிறது” என்று அவர் சொன்னார்.

“ஆலயத்தின் பதிவு ரத்துச் செய்யப்படுவதை குறிக்கும் கடிதம், 23.8.2019இல் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றது. அன்று முதல், ஆர்.ஓ.எஸ். சட்டவிதிகளுக்கு உட்பட்டு, பண விவகாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன; ஆலயத்தின் அதிகாரப்பூர்வ ரசீதுகளும் பயன்பாட்டிலிருந்து முடக்கிவைக்கப்பட்டன!”

“மாரான் ஆலயம், நாட்டின் 2ஆவது பெரிய வழிபாட்டுத் தலமாகும். மாதச் செலவுகள் மட்டும் ரிங்கிட் 40,000 வரைத் தொடும். ஆலயத்தை தொடந்து வழிநடத்துவதற்கான செலவுத் தொகையை ஆலயக் கணக்கிலிருந்து எடுக்க முடியாது. இதனால், பல இன்னல்களுக்கு நாங்கள் ஆளானோம்.”

“ஒற்றுமையுடன் செயல்பட்டோம்; ஆலயப் பதிவை திரும்பப் பெற மேல்முறையீட்டு மனுவையும் சமர்ப்பித்தோம். எங்களின் மேல்முறையீட்டு மனுவை உள்துறை அமைச்சு, சில நிபந்தனையுடன் ஏற்றுக் கொண்டது. நிதி நிர்வாகம் தொடர்பான சட்டத்தை, ஆலய நிர்வாகத்தின் நடப்பு சூழலுக்கு ஏற்ப திருத்திக் கொள்ளுமாறு அது பரிந்துரை வழங்கியது. இது குறித்தக் கடிதம், 21.1.2020இல் எங்களுக்கு கிடைக்கப்பெற்றது,” என டத்தோ தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

ஒருவழியாக, 5 மாத இன்னல்களுக்குப் பிறகு, தங்களின் நீதிப் போராட்டம் வென்றிருப்பதாக மன நிறைவு தெரிவித்த அவர், மேல்முறையீட்டுக்காக உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும், ஆலயத்தின் பதிவு திரும்பக் கிடைக்கும் வரை அமைதி காத்திருந்த பக்தப்பெருமக்களுக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். – செண்ட்ரல்

Google+ Linkedin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

*