பொங்கல் திருநாள் இனிமையையும், இன்பத்தையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் – டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன்

பொங்கல் திருநாள் இனிமையையும், இன்பத்தையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் – டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன்

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

பிறந்திருக்கும் புத்தாண்டை நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் எதிர்கொள்ள நாம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நமது பாரம்பரிய திருநாள்- உழைப்பாளர்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் பெருமைக்குரிய நன்னாள் – பொங்கல் மலர்கின்றது.

இந்த ஆண்டு மலர்கின்ற பொங்கல் நமது மலேசிய இந்தியர்களுக்கு வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, வாழ்க்கையில் இனிமையையும், இன்பத்தையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்து சென்ற ஓராண்டில் நாம் பெற்ற பாடங்களையும், அனுபவங்களையும் படிப்பினையாகக் கொண்டு இந்த ஆண்டில் நம்பிக்கையோடு நடைபோடுவோம்.

கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ள அரசாங்கம் அதற்கான தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு இலவசமாகவே போடவிருக்கிறது என்பது நமக்கெல்லாம் மேலும் கூடுதல் உற்சாகத்தைத் தொடர்ந்திருக்கிறது. நாளடைவில் இந்தத் தொற்றின் தாக்கம் குறையும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதே வேளையில், நமது பொங்கலை இந்த முறை மகிழ்ச்சியாகவும், முழுமையான அளவிலும் கொண்டாட முடியாத சூழலும் ஏற்பட்டிருக்கிறது.

அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால், நாம் இந்த முறை நமது பாரம்பரியத் திருவிழாக்களான பொங்கலையும் அதைத் தொடர்ந்து வரும் தைப்பூசத்தையும் வழக்கம்போல் கொண்டாட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ள மற்றொரு நடவடிக்கையாக அவசரகாலமும் எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை அரசாங்கத்தால் அமுலாக்கப்பட்டிருக்கிறது.

இந்த நெருக்கடியை நமது இந்திய சமூகம், பொறுமையோடும், நன்கு சிந்தித்தும், திறந்த மனதோடும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மக்களின் நலன்களுக்காக, மேலும் நோயின் பாதிப்புகளால் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தோடும் அரசாங்கம் இந்த முடிவுகளை அமுல்படுத்தியிருக்கிறது.

எனவே, நமது பொங்கல் திருநாளை இந்த முறை நமது இல்லங்களுக்குள்ளேயே அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப கொண்டாடி, நமது உடல்நலத்தையும் மற்றவர்கள் உடல் நலத்தையும் பாதுகாப்போம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கூடிய விரைவிலேயே கொவிட்-19 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்படவிருப்பதால், வெகு விரைவில், நமது நாடு இந்த தொற்று நெருக்கடிகளில் இருந்து விடுபட்டு வெற்றி நடை போடும் – நாமும் நமது பாரம்பரிய வழக்கப்படி, நமது பெருநாட்களையும், திருவிழாக்களையும் மீண்டும் மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடும் நிலைமை மீண்டும் வரும் -என்ற நம்பிக்கைகளோடு, பொங்கல் திருநாளை இல்லங்களிலேயே கொண்டாடி மகிழ்வோம்.

Google+ Linkedin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

*