தனிமனித கொள்கையினால் சமுதாயம் பிளவு படக்கூடாது – டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்து

தனிமனித கொள்கையினால் சமுதாயம் பிளவு படக்கூடாது – டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்து

கோலாலும்பூர், ஏப்ரல் 14: தனிமனித கொள்கையினால் இந்திய சமுதாயம் பிளவு படக்கூடாது என்பதே தமது எண்ணம், எதிர்பார்ப்பு, வேண்டுகோள் எல்லாம் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இன்று வலியுறுத்தினார்.

“ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். ஆனால் அதை மற்றவர்மேல் வலிந்து திணிக்கக் கூடாது. தமிழ் புத்தாண்டின் முதல் திகதி சித்திரையா, தையா எனும் சர்ச்சை என்பது கடைசித் தமிழன் இருக்கும் வரை இருந்து வரும். இந்த நாட்டின் மூன்றாவது பெரும்பான்மையான நாம் இம்மாதிரியான விஷயங்களால் பிரிந்திருத்தல் கூடாது.”

“இந்திய சமூகத்தின் ஒற்றுமைக்கும், பிளவு படாத சமூதாயத்தை உருவாக்கவும், ஓர் இந்திய அமைச்சராக அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டியது எனது கடமை. ஒற்றுமையான சமுதாயத்தினை பிரதிநிதிக்கும் பட்சத்தில், சமுதாயத்தின் ஒரே அமைச்சரான எனது குரலும் அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்கும்,” என சரவணன் கூறினார்.

இன்று மாலை மலேசிய இந்து சங்கம் தலைமையிலான இந்தியர் சார் பொது இயக்கங்கள் ஏற்பாட்டில் தலைநகர் ஜாலான் ஸ்கோட் கந்தசாமி ஆலயத்தின் கலா மண்டபத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கையில் சரவணன் இவ்வாறு உரையாற்றினார்.

“அறிவுசார்ந்து, அறிவியல் சார்ந்து சரியானது எது என்பதைக் கலந்து பேசிக் கண்டறிய வேண்டும். தமிழும், சைவமும் இரண்டுமே நமது சமுதாயத்தின் இரு முக்கிய கூறுகள். அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு, இரு தரப்பையும் சார்ந்த அறிஞர்கள், முனைவர்கள் ஒன்று கூடி இதற்கான சுமூகமான தீர்வினைக் காண வேண்டும். இதற்கான நடவடிக்கையினை வெகுவிரைவில் நான் முன்னின்று நடத்துவேன்.”

“பிற இனத்தினர் அரசியல், கொள்கை பேதங்களைக் களைந்து தங்கள் சமுதாயத்தின் நன்மைக்காக ஒன்றிணைந்து செயலாற்றத் தயாராகி வருகின்றனர். ஆனால், நம் சமுதாயமோ அரசியல், பொருளாதாரம், மக்கள் தொகை என அனைத்து ரீதியிலும் பின்தங்கியுள்ளது. இந்நிலையிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி சமுதாய ஒற்றுமை மட்டுமே!”

“எல்லா கருத்து வேறுபாடுகள், குறைபாடுகளையும் மறந்து, நமது சமுதாயம், நமது இனம், நமது மொழி, நமது சமயம் என நான்கு கூறுகளையும் அடிப்படையாக கொண்டு செயல்பட அரசியல், சமூகத் தலைவர்கள் அனைவரும் முன்வரவேண்டும்; இந்திய சமுதாயத்தினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்,” என ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான சரவணன் மேலும் அறிவுறுத்தினார்.

Google+ Linkedin

1 Comment

  • Sukumaran Sinnathamby

    மான்புமிகு டத்தோ சரவணன் அவர்களின் சொற்பொழிவு நேற்று கலா மண்டபத்தில் கேட்டறிந்தேன். அருமையான சொற்பொழிவு. ஒற்றுமை திகழ வாழ்த்துகிறேன். இந்த செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனத்திற்கு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

*